×

தாம்பரம் பேருந்து நிலையத்தில் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு அறிவிக்கும் புதிய மின் சுவர் திரை: அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சாமிநாதன் திறந்து வைத்தனர்

செங்கல்பட்டு: தாம்பரம் பேருந்து நிலையத்தில் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு அறிவிக்கும் புதிய மின் சுவரை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை பொதுமக்கள் அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் சுவர் திரையினை நேற்று ( ஜன.29 ) அன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள பொதுமக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, “அரசின் செய்திகள் மற்றும் திட்டங்கள் குறித்த விவரங்கள் உடனுக்குடன் பொதுமக்களைச் சென்றடையும் வகையில், முதற்கட்டமாக பொதுமக்கள் கூடும் முக்கிய 10 பேருந்து நிலையங்களில் மின்சுவர்கள் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்படும்” என்ற அறிவிப்பினை பேரவையில் செய்தித்துறை அமைச்சர் வெளியிட்டார்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், இதுவரை, காஞ்சிபுரம், கடலூர், மதுரை ஆகிய மூன்று இடங்களில் மின் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தொடர்ந்து நான்காவது மின்சுவராக நேற்று (ஜன.29) அன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் ஆற்றிய உரையில் “முதலமைச்சர் அறிவுரையின்படி, அரசின் திட்டங்கள் அவற்றின் பயன்கள் அனைத்தும் மக்கள் அனைவரையும் சென்றடைவதற்கு வசதியாக அரசு பல்வேறு வகையில் விளம்பரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அவற்றில் ஒன்றாக மக்கள் அதிக அளவில் கூடும் முக்கிய இடங்களில் மின்சுவர்கள் அமைத்து அவற்றின் வழியாகவும் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, நேற்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் மின்சுவர் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்கள். இந்த மின்சுவர் 16 அடி அகலம், 10 அடி உயரம் கொண்டுள்ளது. இந்த மின் சுவரின் வழியாக அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் முனைவர் இல.சுப்ரமணியன்,இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு.த.மோகன்,இ.ஆ.ப., தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.ராஜா, மாநகராட்சி மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன், மண்டலக் குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தாம்பரம் பேருந்து நிலையத்தில் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு அறிவிக்கும் புதிய மின் சுவர் திரை: அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சாமிநாதன் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Ministers ,Thamo Anparasan ,Saminathan ,Tambaram bus station ,Chengalpattu ,Chengalpattu District Tambaram Bus Station ,Public Relations Department ,Thambaram Bus Station ,Thamo.Anparasan ,
× RELATED ஐகோர்ட் தாமாக தொடர்ந்த வழக்குகள் தள்ளிவைப்பு